புகுத்தறிவு
அறிவைப் புகுத்து, பின் பகுத்து .
rss
email
twitter
facebook
  • Home
  • படங்கள்
  • வீடியோ
  • கேள்விகள்
  • கவிதைகள்
  • இயற்கை மருத்துவங்கள்
  • மரங்கள்
  • உடற்பயிற்சிகள்
  • பாடல்கள்
  • செய்திகள்
இறைவன் இயற்கை வடிவில் இருக்கிறான்.

மரங்கள்


மரங்கள்.... மண்ணின் வரங்கள்..
பறவைகளின் பயணியர் விடுதிகள். பாதசாரிகளுக்கு இருக்க இடம் கொடுக்கும் பொதுவுடைமை வீடுகள். சூரிய நெருப்பு சுடுகிற பாதங்களுக்கு நிழல் கொடுக்கும் வெண்கொற்றக் குடைகள்.
மரங்களின் பயன்கள் மகத்தானவை. பசிக்குப் பழங்கள் தருகின்றன. நோய்க்கு மருந்தைக் கொடுக்கின்றன. சுவாசிக்கக் காற்றைத் தருகின்றன. குழந்தைகளுக்குத் தொட்டிலையும், இளமைப் பருவத்தில் சுட்டிலையும், முதுமைப் பருவத்தில் ஊன்று கோலையும், இறக்கும்போது எரிக்க விறகையும் தருகின்றன. மரங்களின்றி வாழ்வு ஏது?
ஒரு மரம் சிறந்ததா? இல்லையா? என்பதை, மரத்தைக் கேட்டு யாரும் தீர்மானிப்பதில்லை. அந்த மரம் கொடுக்கும் பயன்பாடுகளை வைத்துதான் தீர்மானிப்பார்கள். அதுபோல்தான் ஒரு மனிதன் சிறந்தவனா? இல்லையா? என்பது அவனது செயல்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.
இனிய இளைஞனே! மரங்களிடம் கற்க வேண்டிய பாடங்கள் இன்னும் ஏராளமாய் இருக்கின்றன. சந்ததிகளை மறக்காமல் விட்டுச் செல்கிறது வாழை மரம். அந்தச் சந்ததிகளை தலைமுறை தலைமுறையாய் வாழ வைக்கிறது ஆலமரம். இப்போது இங்கே உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புவது ஆலமரத்தைத்தான்.
ஏன் தெரியுமா? பெற்றேரை முதியோர் இல்லத்திற்கு அனுப் புபவர்களுக்கு ஆலமரம்தான் சரியாகப் பாடம் கற்பிக்கிறது. ஆம், தன்னைக் காலமெல்லாம் தாங்கிய அடிமரத்தைத் தன் விழுதுக் கைகளால் அது தாங்கிப் பிடிக்கிறது. தானும் வாழ வேண்டும், தன்னை வளர்த்த வர்களையும் வாழச் செய்ய வேண்டும். பிறருக்குப் பயன்படுவதில்தானே வாழ்வின் சிறப்பு இருக்கிறது என்பதை ஆலமரம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது.
குடும்பம் ஓர் ஆலமரம் போன்றது என்பார்கள். அதில் பெற்றோரே வேர்கள். அந்த வேர்களின் பிடிப்பில் விழாமல் நிற்கும் மரம்தான் மகன். அவனது கரம் பற்றும் மனைவியே மரக்கிளை. அதில் பூக்கும் பூவும், பழுக்கும் பழங்களும்தான் பிள்ளைகள். எங்கிருந்தோ வந்து குடியிருக்கும் பறவைகள்தான் சொந்தம் கொண் டாடும் உறவுகள். பெற்றோர்களைப் புறக்கணித்த வீடு, வேர்களை இழந்த மரமாகப் பட்டுப் போகும். அந்த வேர்களைப் பட்டுப் போகாமல் விழுதுகளை அனுப்பி வேர்களைக் காக்கிறது ஆலமரம். அதனால்தான் ஆலமரத்தை உங்களுக்கு நினை வுபடுத்துகிறேன்.
இயந்திரமாகிப் போன வாழ்க்கை யில் அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் சிதைந்து வருகின்றன. ஆலமரமாய் இருந்த குடும்பம் இன்று உறவுகளைத் தவிர்த்து ஒற்றைப் பனைமரமாய் ஒதுங்கி நிற்கப் பார்க்கிறது.
அன்பின் அடித்தளத்தில் கட் டப்பட்டதே அழகான குடும்பம். அதனால்தான் “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். மாறி வரும் கலாசாரச் சூழலில் வாழ்வியல் மதிப்பீடுகள் மாறிக் கொண்டே வருகின்றன.
பாசத்தால் நெகிழ்ந்த நெஞ்சங்கள், பாறாங்கற்களாய் இறுதிப் போய்க் கொண்டிருக்கின்றன. ‘பணம் தேடு. பணம் தேடியவுடன் அதன் வழி சுகத்தைத் தேடு’. இதுதான் இன்றைய இளைஞர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது.
டொலர், தினார் கனவுகளோடு கடல் கடந்து வெளிநாடுகளுக்குப் போகிறார்கள். வேலையில் அமர்கிறார்கள். சுகபோகங்களில் மூழ்கித் திளைக்கிறார்கள். மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக் கதை இப்படிக் கூறுகிறது.
காசிராஜனின் தேசம். அங்குள்ள வனத்தில் வேடன் ஒருவன் விஷம் தோய்ந்த அம்பை ஒரு விலங்கின் மீது எய்தினான். அது குறி தவறி ஒரு பெரிய மரத்தில் போய் பதிந்தது. விஷ அம்பு பாய்ந்ததால் மரத்தின் இலை, காய், பழம் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக உதிரத் தொடங்கின. அதில் வசித்த பறவைகள் நாளடைவில் திசைக்கொன்றாய் பறக்கவும் தொடங்கின. ஆனால் ஒரே ஒரு கிளி மட்டும் எங்கும் செல்லாமல் அந்த மரத்தின் கிளையிலேயே தங்கி விட்டது.


அதனால் வியப்படைந்த இந்திரன், மனித வடிவம் தாங்கி அந்த மரத்தின் பக்கத்தில் வந்தான். “பட்டுப்போன மரத்தை விட்டுப் பிரியாமல் அதன் கிளையிலேயே அமர்ந்திருக்கிறாயே... இலையும், கனியும் இழந்த இந்த மரத்தால் இனி உனக்கு என்ன பயன்?” என்று அந்தக் கிளியிடம் கேட்டான்.
“இந்த மரத்தில்தான் நான் பிறந்தேன். இந்த கிளையில்தான் நான் வளர்ந்தேன். இதில் பழுத்த பழங்களைத்தான் நான் உண்டு உயிர் வாழ்ந்தேன். எனக்கு அடைக்கலம் தந்த மரம் இன்று பட்டுப் போனதால் இதை விட்டுப் பறந்து போவது எந்த வகையில் நியாயம்?” என்று சொன்னது கிளி.
நன்றியும், விசுவாசமும் நிறைந்த கிளியின் வார்த்தைகளில் நெஞ்சம் நெகிழ்ந்தான் தேவேந்திரன். உடனே அவன் கிளியிடம், “நீ விரும்பும் ஒரு வரம் கேள், தருகிறேன்” என்றான்.
உடனே கிளி, “பட்டமரம் மீண்டும் பசுமை பெற வேண்டும். இதுதான் எனது விருப்பம்” என்றது. இந்திரன் அளித்த வரத்தால் இலையும், கனியுமாக மறுபடியும் உயிர்த்தது மரம்.
மரத்தையும், கிளியையும் மையமாக வைத்து மகாபாரதக் கதை உணர்த்தும் கருத்து இதுதான்: மூத்து முதுமை யடைந்த பெற்றோரால் இனி எந்தப் பயனும் தமக்கு இல்லை என்று பிள்ளைகள் புறக்கணிக்கலாகாது. வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் குடும்ப உறவுகள் சிதைந்து விடக் கூடாது.
வீட்டிலோ பாசம் மறந்த சில இளைஞர்களின் புறக்கணிப்பால் அழுத கண்ணீரும், ஆறாத ரணமுமாய் பெற்றோர் சிலர் கண்ணீர்க்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இளமைக்கு முகவரியைக் கொடுத் தவர்கள் இன்று முகங்களற்று, முகவரியிழந்து முதியோர் இல் லங்களில் முடங்கிப் போய்க் கிடக்கிறார்கள். இன்னும் சிலரின் வீட்டுத் திண்ணைகளில் கிழிந்த போர்வையும், அலுமினியத் தட்டும், கையில் ஒரு கோலும், நன்றி மற வாத ஒரு நாயும் மட்டும் அவர் களுக்குத் துணையாக இருப்பதைக் கண்கள் பார்க்கத்தான் செய்கின்றன.
சின்னஞ்சிறு மகிழ்ச்சியைக் கூட அனுபவிக்காமல் வியர்வையை வெள்ளமாய்ச் சிந்தி வாழ்க்கையைத் தியாகம் செய்து பிள்ளைகளைப் படிக்க வைத்து உயர்ந்த நிலைக்கு ஆளாக்கிய இவர்கள்தான் இன்று இந்த இழிந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். யாருக்கும் பயன்படாமல் பூமிக்குப் பாரமாகப் போய்விட்டோமோ என்ற உணர்வு இவர்களை வாட்டிக் கொண்டிருக் கின்றது.
இனிய இளைஞனே! மரம் தளிர்க்க நல்ல நிலமும், நீரும் தேவைப்படுவது போல மனிதனின் வாழ்வு சிறக்க உறவுமுறைகளின் அன்பும், அரவணைப்பும் அவசியம் என்பதை உணருங்கள்.
மனித மனம் இயந்திரமாகிவிடக் கூடாது. எந்திர உலகின் சுயநலக் கூட்டிலிருந்து வெளிவருபவர்களால் தான் சிந்திக்க முடியும். அவர்கள்தான் பிறரை நேசிக்க முடியும். சுயநலத் தேடல்களும், எந்திர வாழ்க்கையின் வேகமும் மனிதம் காணாமல் போய் விடும் அபாயத்தை உணர்த்துகின்றன.
சுற்றங்களால் வாழ்வதுதான் வாழ்க்கை. வாழ்க்கை மாறலாம். ஆனால் மனிதன் மாறக் கூடாது. ‘பாரம் சுமப்பவர்கள் பாக்கியவான்கள்’ என்கிறது பைபிள் வாசகம். பிறருடைய சுமைகளைப் பகிர்ந்து கொள்வதிலும் சுகம் இருக்கிறது.
எது சுமை? எது சுகம்? இரண்டிற்கும் மனம்தான் காரணம். நம்முடைய மனதை மற்றர்களுக்குத் தரத் தயாராக இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் எதுவும் சுமை இல்லை. அப்போது சுமை கூட சுகமாகி விடுகிறது.
அன்பான இளைஞனே! இளமை யின் ஆற்றல் அளப்பரியது. அந்த ஆற்றலின் அடையாளமாய் இப்போது உன் பருவம் உன்னிடத்தில், உழைத்து உயர், ஆலமரமாய் உன் கிளைகளையும், விழுதுகளையும் பரப்பு! மரம் பிறருக்காக நிழல் தருவதைப் போல உன் நிழலில் உன் பெற்றோரை உட்காரவை. உறவுகளை உட்கார வை. ஏன், ஓர் ஊரையே உட்காரவைத்து அழகு பார். அப்போது உலகம் உன்னை அண்ணாந்து பார்க்கும்.
அறிவை விரிவு செய்.
அகண்டமாக்கு.
விசாலப் பார்வையால் விழுங்கு
மக்களை
அணைந்து கொள் உன்னைச்
சங்கமமாக்கு
மானுடசமுத்திரம் நானென்று கூவு
பிரிவில்லை எங்கும் பேதமில்லை
உலகம் உண்ண உண்
உடுத்த உடு...
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் இந்தப் பாடல் வரிகளை உள்ளத்தில் பதித்துக் கொள். உயர்வை நோக்கி நீ உயர்வாய்!
நன்றி: இணையம்


முத்தமிழ் இறைவன் முருகனுக்கு என் முதற்கண் வணக்கங்கள் .
  • Home
  • படங்கள்
  • வீடியோ
  • கேள்விகள்
  • கவிதைகள்
  • இயற்கை மருத்துவங்கள்
  • மரங்கள்
  • உடற்பயிற்சிகள்
  • பாடல்கள்
  • செய்திகள்

Archives

  • ▼  2011 (1)
    • ▼  June (1)
      • ▼  Jun 03 (1)
        • இயற்கை



Clicking here


Subscribe via Email

Powered by Blogger | Designed by WebTreats
Blogger Templates for WP 2 Blogger sponsored by Cinta